ராணுவத்தில் சேர விரும்புபவர்களுக்கு 'அக்னிபத்' திட்டம் பொன்னான வாய்ப்பு - ராஜ்நாத்சிங்
|ராணுவத்தில் சேர விரும்புபவர்களுக்கு ‘அக்னிபத்’ திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பு என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அத்திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ராணுவ ஆள்தேர்வு நடக்கவில்லை. அதனால், ராணுவத்தில் சேருவதற்கு ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதை மனதில் கொண்டு, பிரதமர் மோடி உத்தரவின்பேரில், அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பை மத்திய அரசு 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தி உள்ளது. பிரதமரின் அக்கறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இதனால், ராணுவத்தில் சேர இன்னும் கணிசமான இளைஞர்களுக்கு கிடைக்கும். ராணுவ பணியை விரும்பும் இளைஞர்களுக்கு இத்திட்டம் பொன்னான வாய்ப்பு. இன்னும் சில நாட்களில், அக்னிபத் திட்டத்துக்கு ஆள் தேர்வு செய்யும் பணி தொடங்கும். ராணுவ பணியை விரும்பும் இளைஞர்கள் அதற்காக தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த துடிப்பான, தேசபக்தி கொண்ட இளைஞர்கள், கடந்த 2 ஆண்டுகளாக ஆள் தேர்வு நடக்காததால் ராணுவத்தில் சேர முடியவில்லை.
இந்தநிலையில், 'அக்னிபத்' திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உத்தரவு, ராணுவத்துக்கு கிடைத்துள்ளது. இந்த சலுகையால், மேலும் எண்ணற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். விரைவில் ஆள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். அக்னி வீரர்களாக சேரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ''வயது வரம்பு அதிகரிப்பால், இன்னும் கணிசமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.