< Back
தேசிய செய்திகள்
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட மனிஷ் திவாரி மறுப்பு
தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட மனிஷ் திவாரி மறுப்பு

தினத்தந்தி
|
11 July 2022 10:01 PM IST

ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் புதிய அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது.

புதுடெல்லி,

ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் புதிய அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய பணி நியமன முறையை 'டூர் ஆப் தி டூட்டி' என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் அக்னிவீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 4 ஆண்டு முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழும் வழங்கப்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வடமாநிலங்களில் இளைஞர்கள் கொந்தளித்தனர். பல நாட்களாக போராட்டம் நீடித்தது. குறிப்பாக பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் வன்முறை வெடித்தது. எதிர்க்கட்சிகளும் அக்னிபத் திட்டம் மத்திய அரசின் மற்றொரு முட்டாள் தனமான நடவடிக்கை என விமர்சித்தது. பண மதிப்பிழப்பு போன்றே இந்த திட்டமும் தோல்வி அடையும் என்று காங்கிரஸ் சாடியிருந்தது.

எனினும், எதிர்ப்புகளை பொருட்படுத்தாத மத்திய அரசு, அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் சார்பில் வெளியிடப்படும் கூட்டறிக்கையில் கையெழுத்திட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மனிஷ் திவாரி மறுத்து இருப்பது அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கையெழுத்திட மறுத்தது தொடர்பாக மனிஷ் திவாரிக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், " அக்னிபத் விவகாரத்தை அரசியல் ஆக்குவது முட்டாள்தனமானது" என்று கூறினர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கடிதத்தில் ஆறு எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்