கர்நாடகத்தில் 1-ம் வகுப்பில் சேர வயது வரம்பு உயர்வு; மாநில அரசு அறிவிப்பு
|கர்நாடகத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர வயது உச்ச வரம்பை அதிகரித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,:
கர்நாடகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டு கடந்த மே மாதமே தொடங்கிவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கிவிட்டன. மாநிலத்தில் 1-ம் வகுப்பில் சேர குழந்தையின் வயது வரம்பு 5 ஆண்டுகள் 10 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதன்படி குழந்தைகள் சேர்க்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கர்நாடக அரசு, 1-ம் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான வயது வரம்பை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதாவது 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று வயது உச்ச வரம்பை உயர்த்தி இருக்கிறது.
இதுகுறித்து தனியார் தொடக்க பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் சசிகுமார் கூறுகையில், '2022-23-ம் கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. மாணவர் சேர்க்கையும் முடிவடைந்துவிட்டது. இந்த நேரத்தில் அரசு குழந்தைகள் சேர்க்கை வயது வரம்பை உயர்த்தி இருப்பது சரியல்ல. இதை நாங்கள் எதிர்க்கிறோம். கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே அரசு உத்தரவிட்டு இருக்க வேண்டும். அதனால் இந்த உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும். நாங்கள் முந்தைய வயது வரம்பு அடிப்படையில் குழந்தைகளை சேர்த்துள்ளோம். இப்போது புதிய உத்தரவை காரணம் காட்டி அந்த குழந்தைகளை நீக்க முடியாது' என்றார்.