என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழ்ந்துவிடும் - ராகுல் காந்தி
|தற்போது அமைந்துள்ள என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழும் அபாயத்தில் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிலைத்து நீடிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நாட்டில் வெறுப்பைப் பரப்பலாம், அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்தை இந்திய மக்கள் இந்த தேர்தலில் நிராகரித்துவிட்டனர். தேர்தல் முடிவுகள் அதை தான் சுட்டிக்காட்டுகிறது.
பிரதமர் மோடிக்கு கடந்த 2014 மற்றும் 2019 ஆட்சி போல இந்த ஆட்சி அமையவில்லை. மத்தியில் தற்போது அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழும் அபாயத்தில் உள்ளது. கூட்டணி கட்சிகள் ஓரணியில் இல்லை. அதுவே இந்த கட்சிகள் நிலையான ஆட்சியை தொடர செய்ய போராட்டமாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றிபெற்றார். இதில் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்கிறார். அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.