பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அடித்து கால்வாயில் வீசிய கொடூரம்
|குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள பக்ரி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர், பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக புதர் பகுதிக்கு இழுத்துச்சென்றனர்.
அங்கு சிறுமியின் கைகளையும், வாயையும் கட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். தொடர்ந்து பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர். 3 பேரையும் எதிர்த்து சிறுமி தொடர்ந்து போராடி வந்த நிலையில், கோபமடைந்த அவர்கள், சிறுமியை அடித்து கால்வாயில் வீசியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
காயமடைந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய குற்றவாளிகள் 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.