வயநாடு எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் - கேரள காங்கிரஸ் தலைவர் பேச்சு
|ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார் என கே.சுதாகரன் தெரிவித்தார்.
வயநாடு,
வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் பேசியதாவது:-
ராகுல் காந்தி இந்தியாவை வழிநடத்தி செல்ல வேண்டிய தலைவர். நாடாளுமன்ற தேர்தலில் அவரது புகழ் ஓங்கி உள்ளது. அவரை மக்கள் அங்கீகரித்து தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டனர். அதனால் 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்று உள்ளார். இந்தியா கூட்டணியை முன்னெடுத்து சென்று, நாட்டை ஆள வேண்டிய தகுதி படைத்த தலைவரான ராகுல் காந்தி, வயநாட்டில் ஒதுங்கி நிற்பது என்பது இயலாத விஷயம் என்பதை நாம் உணர வேண்டும். இதனால் நாம் வருந்தி பயனில்லை. உண்மையை நம் உணர வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, வயநாடு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வார். ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார். அதற்காக ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொள்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.