3000க்கும் மேற்பட்ட டுவிட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம்
|எலான் மஸ்க் 3000க்கும் மேற்பட்ட டுவிட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். இனி வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும் முடியாது
புதுடெல்லி
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வாரம் தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமீபத்திய தகவல்படி டுவிட்டரில் பாதி வேலைகளை குறைக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார். எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3700 வேலைகளை குறைப்பார் என்று அறிக்கை மேலும் தெளிவுபடுத்துகிறது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், மஸ்க் அல்லது டுவிட்டர் தளம் இதுவரை வேலை குறைப்புகளை உறுதிப்படுத்தவில்லை.
மஸ்க் புதிய டுவிட்டர் முதலாளியானவுடன், பணிநீக்கங்கள் தொடர்பான வதந்திகளை மறுத்தார். டுவிட்டர் பயனாளர் எரிக் உமான்ஸ்கி பணிநீக்கங்கள் பற்றி கேட்டதற்கு, "இது தவறானது." என்று மஸ்க் பதிலளித்தார்.
ஆனால் பணிநீக்கங்களை மஸ்க் மறுத்தாலும், பல உயர் நிர்வாகிகள் மற்றும் கிட்டத்தட்ட முழு குழுவும் நிறுவனத்தை விட்டு வெளியேறியது. முன்னாள் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோர் கடந்த வாரம் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு நீக்கப்பட்டவர்களில் முதன்மையானவர்கள்.
இந்த முன்னாள் டுவிட்டர் நிர்வாகிகள் இருவரும் தங்கள் டுவிட்டர் சுயவிவரங்களில் இருந்து "டுவிட்டரில் பணிபுரிவதை" நீக்கியுள்ளனர்.
மேலும் மஸ்க் டுவிட்டரின் தற்போதைய எங்கிருந்தும் வேலை என்ற கொள்கையை மாற்றியமைக்க விரும்புகிறார்.டெஸ்லாவில் செய்ததைப் போலவே, மஸ்க் டுவிட்டர் ஊழியர்களை வீட்டிலிருந்து வாலைபார்ப்பதை தவிர்த்து அலுவலகத்திற்குத் திரும்பச் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.