< Back
தேசிய செய்திகள்
மராட்டிய கவர்னர் 1½ ஆண்டுகள் தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

மராட்டிய கவர்னர் 1½ ஆண்டுகள் தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது- காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
4 July 2022 2:54 AM IST

சபாநாயகருக்கு வாழ்த்து

மராட்டியத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் 2 நாள் சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது.

முதல்நாளான நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் பா.ஜனதா கட்சியை சேர்ந்த ராகுல் நர்வேக்கர் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கவர்னரின் தூக்கம்

"சபாநாயகர் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று தான் நாங்களும் கவர்னரிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தோம். அவர் கடந்த 1½ ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.

மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி அரசு ஆட்சியில் இருந்தபோது, சபாநாயகர் தேர்தலை முறையாக நடத்த விரும்பினர். நடைமுறையில் இருந்த ரகசிய வாக்கெடுப்பு நடைமுறைக்கு எதிரான முழு நடைமுறையையும் வெளிப்படையாக செய்ய நாங்கள் விரும்பினோம். இதற்காக கோர்ட்டு கதவுகளை தட்டவும் முயற்சித்தோம். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு விரைவாக இதுகுறித்து முடிவெடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்ட ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மராட்டிய சட்டசபையில் சபாநாயகர் பதவி காலியாக உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆட்சியில் இருந்து சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசின் தலைவர்கள், பட்ஜெட் கூட்டத்தொடரின்பேது சபாநாயகர் தேர்தலுக்கான அட்டவணையை அங்கிகரிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு முந்தைய கூட்டத்தொடரில் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தேர்தலை நடத்த வசதியாக அப்போதைய மகா விகாஸ் அகாடி அரசு விதிகளில் திருத்தம் செய்தது.

கவர்னரின் இந்த முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி சட்ட ஆலோசனையை கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்