கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: பிரியங்கா காந்தி
|கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே அங்கே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. குறிப்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கத் தொடங்கியிருக்கிறது.
கர்நாடகாவில் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் ஏற்கனவே வாக்குறுதி அளித்து இருந்தது. இந்த நிலையில் , காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி இந்த வாக்குறுதியை அளித்தார். கிருஹ லட்சுமி என பெயரிடப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.5 கோடி குடும்பத்தலைவிக்ள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.