< Back
தேசிய செய்திகள்
ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டு சென்ற பின் பசுங்கோமியம் தெளித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள்
தேசிய செய்திகள்

ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டு சென்ற பின் பசுங்கோமியம் தெளித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள்

தினத்தந்தி
|
13 Sept 2022 2:35 PM IST

மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு புறப்பட்ட பின் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் அந்த இடத்தில் பசுவின் கோமியம் கொண்டு தெளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



புனே,



மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து தனித்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.க்கள் பலர், சிவசேனா மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அரசுக்கு எதிராக இயங்கினர். பின்னர் ஆட்சி கவிழ்ப்பு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலகல் என அடுத்தடுத்து மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின், பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மராட்டிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். முன்னாள் முதல்-மந்திரியான பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரியானார். எனினும், தங்களை உண்மையான சிவசேனா அணி என அறிவிக்க கோரி இரு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளனர்.

இந்த நிலையில், சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றிற்காக ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. தாதர் பகுதியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து 5 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். அதன்பின் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோன்று, கடந்த வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில் விநாயகர் சிலை ஊர்வலங்களின்போது பிரபாதேவி, தாதர் பகுதிகளில் உத்தவ், ஷிண்டே அணியினர் எதிர், எதிரே சந்தித்த போது இருதரப்பினரும் ஒருவரை நோக்கி ஒருவர் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஒரு சில இடங்களில் கைகலப்பு ஏற்பட்டது. எனினும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெரிய அளவில் மோதல் நடைபெறாமல் தடுத்தனர்.

இதில் துப்பாக்கியை பயன்படுத்தினார் என கூறி ஷிண்டே அணியின் சதா சர்வான்கர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அவுரங்காபாத் நகரில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன்பின்பு அவர் புறப்பட்டு சென்றதும், அந்த பகுதிக்கு உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் வந்தனர். அவர்கள் பசுக்களின் கோமியம் நிரப்பிய வாளிகளை உடன் கொண்டு வந்தனர். அவற்றை அந்த பகுதியில் எலுமிச்சை இலைகளை கொண்டு தெளித்து விட்டனர்.

அவர்கள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தலா ரூ.50 கோடி பெற்று கொண்டு தலைமையை எதிர்த்து எதிரணியில் இணைந்து விட்டனர் என தொடர்ந்து குற்றச்சாட்டாக கூறி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது, அவர்கள் இந்த கோஷங்களை எழுப்பியபடியே, பசுங்கோமியம் தெளித்தபடி சென்றனர். எனினும், இதற்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பில் இருந்து உடனடியாக எந்த பதிலும் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்