2029-ம் ஆண்டுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் - மத்திய மந்திரி அமித்ஷா உறுதி
|மசோதாவில் குறைபாடுகள் இருந்தால் பின்னர் சரி செய்யப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசன திருத்த மசோதா ஒன்றை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடந்தது. இதில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த விவாதத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குறுக்கிட்டு பேசினார். அப்போது மகளிருக்கான இடஒதுக்கீடு 2029-ம் ஆண்டுக்குப்பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
"பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும் சமீபத்திய ஜி-20 உச்சி மாநாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையை பிரதமர் நரேந்திர மோடியும் முன்வைத்தார்.
பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, சமபங்களிப்பு போன்றவை அரசின் உயிர் நாடியாகும். மோடி அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது. ஏனெனில் நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அடுத்து வரும் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைகளை உடடினயாக மேற்கொள்ளும்.
அதைத்தொடர்ந்து மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறையை நடைமுறைப்படுத்தும். இதன் மூலம் 2029-ம் ஆண்டுப்பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்திருப்பது இது 5-வது முயற்சி ஆகும். முதலில் தேவேகவுடா அரசு 1996-ம் ஆண்டு கொண்டு வந்தது. அது காலாவதியானது. பின்னர் வாஜ்பாய் அரசு கொண்டு வந்தது. 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது.
அதுவும் நாடாளுமன்ற பதவிக்காலம் முடிவடைந்ததால் காலாவதியானது. இவை உள்பட மொத்தம் 4 முறை பெண்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். ஆனால் இந்த முறை மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மசோதாவில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் பின்னர் செய்யலாம்."
இவ்வாறு அமித்ஷா கூறினார்.