< Back
தேசிய செய்திகள்
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

தினத்தந்தி
|
3 May 2024 4:59 PM IST

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது குறித்த தீர்மானம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்மானம் செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்