அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
|அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.குமரேஷ்பாபு மார்ச் 28-ந் தேதி உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக்கூடியவையே என தெளிவுபடுத்தி இருந்தார்.
அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க கோரிய பிரதான வழக்கில் நிவாரணம் வழங்கியதாகிவிடும் எனக் கூறி, தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி தீர்ப்பளித்தது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம் சிவசங்கர் கடந்த மாதம் 5-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.