< Back
தேசிய செய்திகள்
படிக்கட்டில் தவறி விழுந்ததால் பாட்னா ஆஸ்பத்திரியில் அனுமதி - லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லி கொண்டு செல்ல முடிவு
தேசிய செய்திகள்

படிக்கட்டில் தவறி விழுந்ததால் பாட்னா ஆஸ்பத்திரியில் அனுமதி - லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லி கொண்டு செல்ல முடிவு

தினத்தந்தி
|
7 July 2022 6:30 AM IST

படிக்கட்டில் தவறி விழுந்ததால் பாட்னா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் லாலுபிரசாத்தை சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கூறினார்.

பாட்னா,

ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ், ஜெயில் தண்டனை அனுபவித்த பிறகு, பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருந்தார்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று லாலுபிரசாத் யாதவை பார்த்தார். அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது, லாலுபிரசாத்தின் மனைவியும், முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

லாலுபிரசாத் யாதவ், எனது பழைய நண்பர். குடும்பத்தினர் விருப்பப்படி, அவர் டெல்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு அவருக்கு சிறப்பான, நவீன சிகிச்சை அளிக்கப்படும். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதுபோல், பீகார் மாநில சுகாதார மந்திரி மங்கள் பாண்டே, ஆஸ்பத்திரிக்கு சென்று லாலு உடல்நிலையை கேட்டறிந்தார். ஏர் ஆம்புலன்ஸ் மூலம் லாலுவை டெல்லிக்கு கொண்டு செல்வதற்கு என்னென்ன தேவை என்று விசாரித்தார்.

பீகார் தொழில்துறை மந்திரி ஷாநவாஸ் உசேன் உள்பட கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் பலர் லாலுவை பார்த்தனர்.

பிரதமர் மோடி, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, லாலு உடல்நிலையை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்