< Back
தேசிய செய்திகள்
கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
30 May 2022 11:24 PM IST

கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாபில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணிகளை முடிப்பதற்காக 263 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி எம்.கே. நக்பால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அர்ஷ்தீப் சிங், பிரதீக் சட்டா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

கார்த்தி சிதம்பரம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் சிபிஐ வசம் இல்லை என்றும், அதேநேரத்தில் சிபிஐ-ன் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறி அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி கபில் சிபல் வாதிட்டார். மேலும் ரூ. 50 லட்சம் நிதி மோசடி செய்துவிட்டதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் ரூ. 1கோடியை முன்ஜாமீனுக்காக நீதிமன்றத்திற்கு செலுத்த தயாராக இருப்பதாகவும் எனவே அவருக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.கே. நக்பால், தீர்ப்பினை வரும் ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்