< Back
தேசிய செய்திகள்
ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
27 March 2023 12:48 PM IST

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நீதிமன்றத்தை நாடி இருந்தனர்.

இதனை அடுத்து 6 இடங்களை தவிர மற்ற 44 இடங்களில் பாதுகாப்புடன் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதிவழங்கியிருந்தார். எனினும் சுற்றுசுவருக்குள் நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது அந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, பொது சாலைகளில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அதுமட்டும் அல்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதனை சரிசெய்யவேண்டியது காவல்துறையினரின் கடமை எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, பேரணி நடத்துவதற்க்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதிவழங்கியது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணி மேல்முறையீடு வழக்கு இன்று (27-ந் தேதி) மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கமுடியும். பேரணிக்கு முழு தடைவிதிக்கவில்லை; நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்