< Back
தேசிய செய்திகள்
பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

பட்டாசுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
15 Sept 2023 3:10 AM IST

பட்டாசு விற்பனை உரிமங்களை டெல்லி போலீஸ் வழங்க வேண்டாம் என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, பட்டாசுக்கு தடை கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

புதுடெல்லி,

பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.

தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரியும் அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

இடையீட்டு மனு

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

இதுதொடர்பான மனுக்கள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, "டெல்லியில் சட்டவிரோத பட்டாசு விற்பனை கண்காணிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என வாதிட்டார்.

முழுமையான தடை

அப்போது நீதிபதிகள், "பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தீர்வாகாது. சட்டவிரோத பட்டாசுக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுதான் உரிய தீர்வாக இருக்க முடியும். பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் மாநில அரசு தடை விதிக்கும் பட்சத்தில், அது முழுமையான தடையாக கொள்ள வேண்டும். எவ்வித தற்காலிக உரிமத்தையும் டெல்லி போலீஸ் வழங்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். பட்டாசு விற்பனைக்கு உரிமம் வழங்கினால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகிவிடும்" என குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து, மனுதாரர்கள் அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன், "டெல்லியில் பட்டாசுக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டாலும், தடையை மீறி சட்டவிரோதமாக பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு வெடிக்கப்படுகின்றன. பட்டாசு வெடிப்பதற்கு முழுமையான தடையை விதிக்க வேண்டும் என கோரவில்லை. பேரியம் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை" என வாதிட்டார்.

தீர்ப்பு தள்ளிவைப்பு

பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், "பட்டாசு தொடர்பான முழுமையான ஆய்வுகள் முன்பு இல்லை. இதனால், பேரியம் பயன்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தற்காலிகமாக தடை விதித்தது. ஆனால் தற்போது விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை பேரியம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் எந்தவொரு நாட்டிலும் பட்டாசு உற்பத்தியில் பேரியத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. சி.ஐ.எஸ்.ஆர்., நீரி போன்ற மத்திய அரசின் அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ள பார்முலாவின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன" என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இடையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

மேலும் செய்திகள்