இந்து கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர் குழு அமைக்க கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு..!!
|இந்து கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர் குழு அமைக்க கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் இந்து கோவில்களை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க கோரி இந்து தர்ம பரிஷத் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கோவில்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 1,045 இந்து கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர் குழு நியமனம் பணி தொடங்கியுள்ளது. நியமனம் 6 மாதங்களுக்குள் நிறைவடைந்துவிடும். ஒவ்வொரு இந்து கோவிலையும் நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான அறங்காவலர் குழு அமைப்பது சாத்தியமில்லை. அதன்படி, இந்து தர்ம பரிஷத்தின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெயதீப் குப்தா, தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், பதில் மனு தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அளித்த உறுதியை சுட்டிக்காட்டினர். மேலும், விசாரணையை ஜனவரி 30-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.