அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு
|அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். ராமர் பிறந்த இடத்தை சர்வதேச சுற்றுலா தலமாக்க உறுதி பூண்டிருப்பதாக கூறினார்.
அயோத்தி,
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்றார். ராம ஜென்மபூமியிலும், அனுமன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நடக்கும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். டெதி பஜார் பகுதிக்கு சென்று பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட்டார்.
பின்னர், அயோத்தியில் ரூ.1,057 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
500 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் வலிமையான மனஉறுதியே காரணம்.
2017-ம் ஆண்டுக்கு முன்பு, அயோத்தி இருளில் மூழ்கி கிடந்தது. தற்போது, எல்.இ.டி. விளக்குகளால் ஒளிர்கிறது. தடையற்ற மின்சாரம் கிடைக்கிறது. இரட்டை என்ஜின் அரசு, அயோத்தியை மாநகராட்சியாக உயர்த்தி உள்ளது.
அயோத்தியின் மேம்பாட்டுக்காக ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. உலகத்தர வசதிகளுடன் அயோத்தியை மத, வேத, ஆன்மிக நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். அது மட்டுமின்றி, ராமர் பிறந்த இடத்தை சர்வதேச சுற்றுலா தலமாக்க உறுதி பூண்டுள்ளோம் என்று அவர் பேசினார்.