'ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்' - ஆதித்யா தாக்கரே வலியுறுத்தல்
|முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் மராத்தா இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்த்தில் வன்முறை வெடித்தது. இதில் 14 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராத்தா அமைப்புகள் சார்பில் வாஷிம் மாவட்டம் ராஜ்குமார் சவுக்கில் நேற்று சாலை மறியல் நடத்தப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தடியடி நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்ய வேண்டும், தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் ஜல்னா வன்முறை மற்றும் போலீஸ் தடியடி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மராட்டிய மாநில அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் மந்திரி ஆதித்யா தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"ஜல்னாவில் நடந்ததை அனைவரும் பார்த்திருப்போம். எதிரிகளை தாக்குவது போல் மிகவும் கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டுள்ளது. அங்கு உணர்வுப்பூர்வமான பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை. கொஞ்சம் வெட்கம் இருந்தால் மாநில அரசு பதவி விலக வேண்டும்."
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.