'ஆதித்யா எல்-1 திட்டம் மொத்த உலகத்திற்குமானது' - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
|விண்கலத்தை சரியான புள்ளியில் நிலைநிறுத்த பல திருத்தங்களை செய்ய வேண்டியிருந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள 'லக்ராஞ்சியன் பாயின்ட்' எனப்படும் எல்-1 புள்ளியில் இன்று நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
'லக்ராஞ்சியன் பாயின்ட்' என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நடுநிலையான ஈர்ப்பு விசையைக் கொண்ட ஒரு பகுதி ஆகும். தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தைக் கொண்டு ஆதித்யா எல்-1 விண்கலம் 'ஹேலோ ஆர்பிட்' எனப்படும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.
இதன் மூலம் விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து இந்த விண்கலம் ஆராய உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"ஆதித்யா எல்-1 திட்டம் மொத்த உலகத்திற்குமானது, இந்தியாவிற்கானது மட்டுமல்ல. அதன் அறிவியல் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்று ஆதித்யா எல்-1 விண்கலம் துல்லியமான ஹேலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதை சரியான புள்ளியில் நிலைநிறுத்த நாம் பல திருத்தங்களை செய்ய வேண்டியிருந்தது. எங்கள் கணக்கீட்டின்படி இப்போது விண்கலம் சரியான இடத்தில் உள்ளது.
நமது விஞ்ஞானிகளின் சரியான அளவீடு மற்றும் வேகத் தேவையின் சரியான கணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆதித்யா எல்-1 விண்கலம் சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. "
இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.