ஆதிக் அகமது கொலை எதிரொலி; பத்திரிகையாளர் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய அரசு முடிவு
|ஆதிக் அகமதுவை நிருபர்கள் போல் வந்து சுட்டு கொன்ற நிலையில், பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை நேற்றிரவு சுட்டு வீழ்த்தியது.
அவர்கள் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாகவும் வெளிவந்து உள்ளன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவர்கள் இருவரும் சுடப்பட்ட சம்பவம் எதிரொலியாக, உத்தர பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி பிரயாக்ராஜ் மாவட்ட காவல் ஆணையாளர் ரமீத் சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
ஊடகக்காரர்கள் போன்று வந்த 3 பேர் திடீரென அவர்களை சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில், பத்திரிகையாளர் ஒருவரும் காயம் அடைந்து உள்ளார். கான்ஸ்டபிள் ஒருவருக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளது என கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என ஆதிக் அகமது கூறி வந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது. இதனால், யாரை பாதுகாக்க இதுபோன்று நடந்து உள்ளது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இதுபற்றிய போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவில், ரவுடியாக இருந்து அரசியல்வாதியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை, நாங்கள் பிரபலமடைவதற்காக கொலை செய்தோம் என துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் கூறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதிக் மற்றும் அஷ்ரப் இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதும், நாங்கள் நிருபர்கள் போன்று எங்களை காட்டி கொண்டோம். பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து ஒன்றாகவே சுற்றி வந்தோம். இரண்டு பேரையும் சுட்டு கொல்வது என முடிவு செய்தோம் என்று அந்த 3 பேரும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்து உள்ளனர் என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது. இதனால், இந்த வழக்கில் பல விசயங்கள் விசாரணைக்கு பின் வெளிவரும் என கூறப்படுகிறது.
ஆதிக் அகமதுவை நிருபர்கள் போல் வந்து கொலைக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொன்ற நிலையில், பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பது என அரசு முடிவு செய்து உள்ளது.
துப்பாக்கி சூட்டில் பத்திரிகையாளர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் என காயம் அடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.
இதன்படி, பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிகாட்டுதலின் பேரில், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.