கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: புதுவை முதல்-அமைச்சர் வேண்டுகோள்
|கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவி வருகிறது. கொரோனா 2 தவணை தடுப்பூசியை ஏற்கனவே 17 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் பூஸ்டர் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இந்த ஊசியை கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு 75 நாட்களுக்கு நாடு முழுவதும் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதல், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா முற்றிலும் குறைந்ததும், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் காரணமாக இருந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா மீண்டும் வேகமாக பரவும். அதற்கேற்ப மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கை களை அரசு எடுத்து வருகிறது. இதற்காக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 350 குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும், தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி வருகின்றனர்.
இதில் 70 குழுக்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. முகாமை முதல்- அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார். அவருடன் கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, உதவி இயக்குனர்கள் ராஜாம்பாள், ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா விதிமுறைகளையும் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.