< Back
தேசிய செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்; மந்திரி பைரதி பசவராஜ் பேட்டி
தேசிய செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்; மந்திரி பைரதி பசவராஜ் பேட்டி

தினத்தந்தி
|
17 July 2022 8:09 PM IST

சிக்கமகளூருவில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மந்திரி பைரதி பசவராஜ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

மழை பாதித்த இடங்களில் ஆய்வு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மலைநாடு, கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. இதேபோல் சிக்கமகளூருவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சில வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தது. விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளது.

மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூருவில், மழையால் பாதித்த இடங்களை மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் நேரில் சென்று நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார். அப்போது அவர், கனமழைக்கு வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட நிவாரண நிதி வழங்கினார்.

இதையடுத்து சிக்கமகளூரு டவுன் சங்கர்புரா தமிழ் காலனி பகுதிக்கு சென்று மழை பாதித்த இடங்களை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற மந்திரி, கலெக்டர் ரமேஷ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி உடன் இருந்தார். இதைதொடர்ந்து மந்திரி பைரதி பசவராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிவாரணம் வழங்கப்படும்

சிக்கமகளூரு மாவட்டத்தில் கனமழைக்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளது. அவர்களுக்கு அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

மேலும் வீடு இடிந்தவர்களுக்கு முதற்கட்டமாக அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது வரை மழைக்கு 1,144 ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது.

மேலும் சேதமடைந்த வீடுகள், விளைநிலங்கள் குறித்து கணக்கெடுத்து அறிக்கை வழங்கும்படி கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, ஆப்தமித்ரா குழுவினரை மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சேற்றில் சிக்கிய மந்திரி

மூடிகெரே தாலுகா அரேனூர் பகுதியில் மழை பாதித்த இடங்களில் மந்திரி பைரதி பசவராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள சேற்றிற்குள் கால் வைத்தார்.

அதில் சேற்றில் மந்திரி பைரதி பசவராஜின் கால் சிக்கி கொண்டது. இதையறிந்த மீட்பு குழுவினர், அதிகாரிகள் பைரதி பசவராஜை மீட்டனர்.

மேலும் செய்திகள்