பெங்களூரு-மங்களூரு இடையே கூடுதல் ரெயில்; பொதுமக்கள் கோரிக்கை
|பெங்களூரு-மங்களூரு இடையே கூடுதல் ரெயில்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மங்களூரு;
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மலைநாடு, கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்கிறது.
தொடர் மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஷிராடிகேட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் சிக்கமகளூரு-மங்களூரு செல்லும் பிரதான பாதையான சார்மடி மலைப்பாதை மற்றும் சம்பாஜே, ஆகும்பே ஆகிய மலைப்பாதைகளிலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மங்களூருவில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குறைந்த ரெயில்களே இயக்கப்படுகிறது. இதனால் ரெயில்களில் பயணிகள் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக பெங்களூரு-மங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு இடையே கூடுதல் ரெயில் இயக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க நளின்குமார் கட்டீல் எம்.பி., மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்து கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.