< Back
தேசிய செய்திகள்
கார் மீது முட்டை வீச்சு சம்பவம் எதிரொலி: சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
தேசிய செய்திகள்

கார் மீது முட்டை வீச்சு சம்பவம் எதிரொலி: சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

தினத்தந்தி
|
20 Aug 2022 11:05 PM IST

கார் மீது முட்டை வீசிய விவகாரத்தில் சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை மரியாதை

முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, பெங்களூரு விதானசவுதாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவராஜ் அர்ஸ், ராஜீவ்காந்தியின் உருவ படங்களுக்கு மலர் தூவி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மரியாதை செலுத்தினார்.

பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின்.

முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்திருந்தார். தனக்கென்று தனியாக ஒரு பாதையை உருவாக்கி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் வளர்ச்சியில் தேவராஜ் அர்ஸ் தனிக்கவனம் செலுத்தினார். ஏழை, எளிய மக்கள் மீதும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார். அதற்காக அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தனி திட்டங்களை தேவராஜ் அர்ஸ் கொண்டு வந்திருந்தார். கர்நாடகத்தில் உழுதவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற புதிய சட்டத்தை அவர் கொண்டு வந்திருந்தார். அவர் யாருக்காக போராட்டம் நடத்தினாரோ, இறுதியில் அவர்களே தேவராஜ் அர்சுடன் இல்லாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

உலகத்திற்கே தெரியும்

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி பேச வேண்டிய அவசியமில்லை. இதற்கு கூடுதல் மகத்துவம் கொடுக்க வேண்டாம். வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா உடைக்க முயன்றது இந்த உலகத்திற்கே தெரியும். அதில் இருக்கும் உண்மை என்ன? என்பது பற்றியும் இந்த மாநில மக்களுக்கு தெரியும். எனவே ரம்பாபுரி மடாதிபதியும், சித்தராமையாவும் பேசிக் கொண்டது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராைமையாவின் கார் மீது முட்டை வீசிய சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவததில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். இதுதொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் பேசியுள்ளேன். சித்தராமையாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படியும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்