< Back
தேசிய செய்திகள்
மண்டியாவில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு
தேசிய செய்திகள்

மண்டியாவில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு

தினத்தந்தி
|
1 July 2023 2:58 AM IST

பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலையில் மண்டியா மாவட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மூதாட்டி ஒருவர் கண்ணீர் கோரிக்கை விடுத்தார்.

மண்டியா:-

பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை

பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலையை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். இந்த சாலையில் சில இடங்களில் அறிவியல்பூர்வமற்ற முறையில் சாலை அமைத்து இருப்பதாலும், பல இடங்களில் வேகத்தடைகள் இல்லாததாலும், வளைவுகளில் அறிவிப்பு பலகை இல்லாததாலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 545 விபத்துகளில் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கர்நாடக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநகரில் 10 வழிச்சாலையில் ஆய்வு செய்தார். அப்போது சில இடங்களில் வேகத்தடையை அகற்றவும், சில இடங்களில் வேகத்தடை அமைக்கவும் உத்தரவிட்டார்.

மூதாட்டி கண்ணீர் கோரிக்கை

இந்த நிலையில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் நேற்று மண்டியா மாவட்டத்தில் செல்லும் பெங்களூரு-மைசூரு அதிவிரைவுச்சாலையில் ஆய்வு பணி செய்தார். அப்போது ஏற்கனவே அந்த சாலையில் விபத்து ஏற்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டார்.

அப்போது 10 வழிச்சாலையையொட்டி சர்வீஸ் ரோடு அருகில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர், கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமாரிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தார். அதாவது, 10 வழிச்சாலை அமைக்கப்பட்ட சமயத்தில் சர்வீஸ் சாலை போட்டனர். ஆனால் சர்வீஸ் ரோட்டில் வடிகால்வசதியை முறையாக அமைக்கவில்லை.

இதனால் மழை பெய்யும் போது எனது குடிசை வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிேறன். எனவே இந்த பிரச்சினைக்கு நீங்கள் தீர்வுகாண வேண்டும் என கூறி மூதாட்டி கண்ணீர்விட்டார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அவருக்கு ஆறுதல் கூறிய கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார், விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அவர் உறுதி அளித்தார்.

மேலும் அப்பகுதி மக்கள், 10 வழிச்சாலையில் சில இடங்களில் முறையாக சாலை அமைக்கவில்லை. சில இடங்களில் சர்வீஸ் சாலையை சரியாக அமைக்கவில்லை. மேலும் 10 வழிச்சாலையில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை இருப்பதும், வளைவுகள் பற்றிய அறிவிப்பு பலகை இல்லாததும் விபத்துக்கள் அதிகரிக்க காரணம் என கூறினர். இதையடுத்து அங்கிருந்த நெடுஞ்சாலை துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்கவும், வளைவுகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்