திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு
|பக்தர்கள் பிரமோற்சவ விழாவில் சிரமம் இன்றி கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவ விழா பக்தர்கள் இன்றி கோவிலுக்கு உள்ளேயே சாமி வீதி உலா நடந்தது.
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருட சேவை அன்று ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வருவதால் கூடுதலாக பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 300 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் பிரமோற்சவ விழாவில் சிரமம் இன்றி கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக 40 பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி திருப்பதி, திருமலை, சித்தூர், காளஹஸ்தி, புத்தூர், கூடூர், வெங்கடகிரி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 340 பஸ்கள் புதியதாக பெயிண்ட் அடித்து, என்ஜின்களில் பழுது நீக்கி புதுப்பிக்கும் பணி தொடங்கியது.