அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சி: நிதி-மந்திரி மௌனம் காப்பது ஏன்..? - காங்கிரஸ் கேள்வி
|அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளநிலையில், நிதி-மந்திரி மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமப் பங்குகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை கடும் சரிவுடன் வர்த்தகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ, அதானி குழுமத்தில் பங்குகளை வாங்கி 78 ஆயிரம் கோடிகளை இழந்த பின்பும் மத்திய நிதிமந்திரியும், விசாரணை அமைப்புகளும் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது
இதுதொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில், "அதானி குழுமத்தின் கடுமையான மோசடிப் புகார்களை அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி உள்ளது. இந்தக் குழும நிறுவன பங்குகளின் மதிப்பில் 4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், எல்ஐசி பங்குகள் ரூ.22,442 கோடியை இழந்துள்ளன. எல்ஐசி பொதுப் பணம்! ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின், அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசி முதலீட்டின் மதிப்பு ரூ.77,000 கோடியிலிருந்து ரூ.53,000 கோடியாகக் குறைந்துள்ளது - ரூ.23,500 கோடி இழப்பு. இருந்த போதும் அதானி குழுமத்தில் எல்ஐசி இன்னும் ரூ.300 கோடி முதலீடு செய்வது ஏன்?
எதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்? இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் மத்திய நிதிமந்திரி ஆகியோர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். நிதிமந்திரி விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.