< Back
தேசிய செய்திகள்
அதானி விவகாரம்: பிப்ரவரி 6-ந் தேதி நாடு முழுவதும் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
தேசிய செய்திகள்

அதானி விவகாரம்: பிப்ரவரி 6-ந் தேதி நாடு முழுவதும் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Feb 2023 12:24 PM IST

அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6-ம் தேதி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி ஆய்வறிக்கை வெளியிட்டது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனாலும் அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.8.22 லட்சம் கோடி சரிந்தது.

அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களிலும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பெரும் முதலீடுகளை செய்துள்ளது. கடன் மற்றும் பங்குகள் வகையில் ரூ.36,474 கோடியை எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது. மேலும் ஸ்டேட் வங்கி, அதானி குழுமத்துக்கு கடன் வழங்கியுள்ளது. ஆனால் சொத்துக்கள் அடிப்படையிலேயே கடன் வழங்கியுள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி மற்றும் ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. நிறுவனம் முன்பும், கடன் வழங்கிய ஸ்டேட் வங்கி முன்பும் காங்கிரஸ் சார்பில் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) போராட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. மற்றும் ஸ்டேட் வங்கி கிளைகள் முன்பு இந்த போராட்டம் நடக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-

மத்திய அரசு பொதுமக்களின் பணத்தை தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. மற்றும் ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன்பு வருகிற 6-ந்தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

எல்.ஐ.சி. மற்றும் ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனம் மற்றும் வங்கிகளை அதானி குழுமத்துக்கு ஆதரவாக பயன்படுத்துவதால் நடுத்தர மக்களின் சேமிப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்