< Back
தேசிய செய்திகள்
அதானி விவகாரம்: பிரதமரை மவுனி பாபா என சாடிய கார்கேவால் பரபரப்பு
தேசிய செய்திகள்

அதானி விவகாரம்: பிரதமரை மவுனி பாபா என சாடிய கார்கேவால் பரபரப்பு

தினத்தந்தி
|
8 Feb 2023 3:28 PM IST

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவையில் மவுனி பாபா என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.



புதுடெல்லி,


நாடாளுமன்ற மேலவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தும் வகையில், பூஜ்ய நேரம் மற்றும் கேள்வி நேரம் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டது.

இந்நிலையில், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை தேவை என காங்கிரஸ் தலைவர் மற்றும் அவையின் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அவையில் ஜனாதிபதி உரைக்கு பதிலளித்து பேசுவதற்காக எழுந்த கார்கே பேசும்போது, நீங்கள் ஏன் அதிகம் அமைதியாக இருக்கிறீர்கள்? என பிரதமரை நான் கேட்க விரும்புகிறேன்.

ஒவ்வொருவரையும் நீங்கள் அச்சுறுத்தி வருகிறீர்கள். ஆனால், தொழிலதிபர்களை ஏன் நீங்கள் அச்சுறுத்துவதில்லை? என கேள்வி எழுப்பினார்.

யாரேனும் வெறுப்புணர்வை பரப்பினால், அவர்களை நோக்கி பிரதமர் ஒரு பார்வை பார்த்தால், உடனே அவர்கள், இந்த முறை தேர்தலில் போட்டியிட நமக்கு சீட் கிடைக்காமல் போய் விடுமோ என அமர்ந்து யோசிக்க தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இன்று, அவரே அமைதியாக இருக்க முடிவு செய்து விட்டார். அவர் மவுனி பாபாவாக மாறி விட்டார் என கார்கே பேசியுள்ளார். இதனால், அவையில் சற்று பரபரப்பு காணப்பட்டது.

எனினும் உடனடியாக நாடாளுமன்ற மேலவை சபாநாயகர் ஜகதீப் தன்கார் குறுக்கிட்டு பேசும்போது, உங்கள் பதவிக்கு இது பொருந்தவில்லை. வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், சில பதவிகளுக்கு பெரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

கடந்த டிசம்பர் 8-ந்தேதி இந்த அவையில் நான் பேசும்போது, அவை தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் 2 முன்னாள் பிரதமர்கள் பேசுவார்கள் என்றேன். ஏன்? இந்த பதவிகளுக்கு என உயர்ந்த கண்ணியம் வாய்ந்த நிலைப்பாடு உள்ளது.

நீங்கள் ஒரு மூத்த உறுப்பினர். எதிர்க்கட்சி தலைவரை நோக்கி யாரேனும் தவறாக பேசினால், அவரை காப்பாற்ற நான் வருவேன் என கூறியுள்ளார். அது ஒரு மதிப்பு உயர்த்தப்பட்ட அரசியல் சாசன பொறுப்பு. அதற்கேற்ற வகையில் நீங்கள் விவாதம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் என தங்கார் கூறினார்.

மேலும் செய்திகள்