அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்.. விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
|24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாக செபி தனது அறிக்கையில் கூறியிருந்தது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் தொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஜனவரி மாதம் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தது.
"இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தது. பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன" என்று ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தன. அதானி நிறுவனத்தை நம்பியிருந்த ஏராளமான சிறு குறு நிறுவனங்களும் இழப்பை சந்தித்தன.
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து செபி விசாரித்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
செபி தனது விசாரணை அறிக்கையை கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், 24 அம்சங்கள் குறித்த விசாரணையில் 22 விசாரணைகள் நிறைவடைந்துவிட்டதாக கூறியிருந்தது.
இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்வதால் இந்த வழக்கை தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.