< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் தலைதூக்கிய தண்ணீர் தட்டுப்பாடு: சிக்கனமாக நீரை பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் தலைதூக்கிய தண்ணீர் தட்டுப்பாடு: சிக்கனமாக நீரை பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி
|
7 March 2024 10:14 AM IST

கோடை காலம் எப்போது எல்லாம் தொடங்குகிறதோ அப்போது எல்லாம் பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை எழுவது வாடிக்கையாகி போனது.

பெங்களூரு,

தலைநகரில் தலைதூக்கியுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் சிக்கனமாக நீரை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க குடியிருப்போர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். ஓங்கி உயர்ந்து நிற்கும் ஐ.டி. நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் உலகின் மூலை முடுக்கெடுங்கும் பரவியுள்ள பெங்களூருவின் புகழ், பெருமை வெளிநாட்டினரையும் கவரவைத்துள்ளது. இதனால் தொழில்நுட்ப நகரம் என்ற பெயர் பெற்று திகழ்கிறது, பெங்களூரு.

கோடை காலம் எப்போது எல்லாம் தொடங்குகிறதோ அப்போது எல்லாம் பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை எழுவது வாடிக்கையாகி போனது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பொய்த்துப்போன தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதுவும் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு திறக்கப்பட்டு வருவதால், நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் வரை தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் சூழல் நிலவுகிறது.

பெங்களூருவின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கிருஷ்ணராஜசாகர் அணை தான் திகழ்கிறது. அணையில் உள்ள நீர் தான் பெங்களூருவுக்கு குடிநீராக வினியோகிக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து இல்லாத நிலையில் வெயில் சுட்டெரித்து வருவதால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவக் கூடும் என கருதப்படுகிறது. இதனால் பெங்களூருவுக்கு வழக்கமாக வழங்கப்படும் அளவை விட குறைந்த அளவில் மட்டுமே காவிரி நீர் வினியோகிக்கப்படுகிறது.

இதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கி வருகிறது. குறிப்பாக ஆர்.ஆர்.நகர், ஆர்.டி.நகர், மகாதேவபுரா, கெங்கேரி, ராஜாஜிநகர், ஜெயநகர், கோரமங்களா, கே.ஆர்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகிக்கப்பட்ட காவிரி நீர், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வழங்கப்படுகிறது. அதுவும் குறைந்த அளவு நீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இதனால் மக்கள், தண்ணீரை சிக்கனமாக கடைப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் பல இன்னல்களையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் நிலை அந்தோ பரிதாபமாக உள்ளது. அதாவது எலகங்கா, மகாதேவபுரா, வெளிவட்ட சாலை, ஒயிட்பீல்டு, கோரமங்களா பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு கடந்த 15 நாட்களாக நிலவுகிறது. அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்களது குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

ஒயிட்பீல்டில் உள்ள பாம் மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு, அதன் குடியிருப்போர் நலச்சங்கம், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எனவே தண்ணீரை சிக்கனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுபோல் கனகபுராவில் உள்ள பிரஸ்டீஜ் பால்கன் சிட்டி அப்பார்ட்மெண்ட் என்ற குடியிருப்பில் 2,500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த குடும்பத்தினர் அனைவருக்கும், தண்ணீர் பயன்பாட்டை குறைக்க கோரி நோட்டீஸ் வினியோகித்துள்ளனர்.

மேலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக செலவிடும்படி குடியிருப்போர் நலச்சங்கங்கள் அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியுள்ளன. மாநகரில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு சங்கங்கள், தங்கள் குடியிருப்புகளில் வசிப்போருக்கு 20 சதவீத அளவுக்கு தண்ணீர் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

சில குடியிருப்பு சங்கங்கள் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தண்ணீரை சிக்கனமாக செலவிடுகிறார்களா? அல்லது தண்ணீரை மனம்போன போக்கில் பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிக்க பணியாளர்களை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தாமல் வீணாக செலவிடும் நபர்களை கண்டறிந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் குடியிருப்பு சங்கங்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஏனெனில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை டேங்கர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்