காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி...!
|நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகினார்.
ஐதராபாத்,
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி, 2020-ஆம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார்.
இதனிடையே, தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. அதன்படி, நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவ.30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.