நடிகை ஸ்ரீதேவி மரண விவகாரம்: பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
|நடிகை ஸ்ரீதேவி மரண விவகாரம் தொடர்பாக பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், துபாயில் ஓட்டல் குளியலறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை சேர்ந்த தீப்தி ஆர்.பின்னிதி என்ற பெண், 'யூ டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, இரண்டு அரசுகளும் ஸ்ரீதேவி மரண மர்மங்களை மூடி மறைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தான் சொந்தமாக விசாரணை நடத்தி, இதை கண்டுபிடித்ததாக அவர் கூறினார். பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் எழுதியதாக சில கடிதங்களையும், சுப்ரீம் கோர்ட்டு ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரக ஆவணங்கள் என்ற பெயரில் சில ஆவணங்களையும் வெளியிட்டார். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்துக்கு மும்பை வக்கீல் சாந்தினி ஷா என்பவர் புகார் அனுப்பினார். பிரதமர் அலுவலகம், அதை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைத்தது.
அதன்பேரில், கடந்த ஆண்டு, தீப்தி ஆர்.பின்னிதி, அவருடைய வக்கீல் பாரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. தீப்தி ஆர்.பின்னிதி வீட்டில் சோதனை நடத்தியது. அதில், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், தீப்தி ஆர்.பின்னிதி, வக்கீல் காமத் ஆகியோருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் கடிதங்கள் உள்பட தீப்தி தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று விசாரணையில் தெரிய வந்ததாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த தீப்தி, ''குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது கோர்ட்டில் ஆதாரங்களை அளிப்பேன்'' என்று கூறினார்.