நடிகை சஞ்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழில் அதிபர் மீது வழக்கு
|வாகனம் நிறுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நடிகை சஞ்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழில்அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:
வாகனம் நிறுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நடிகை சஞ்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழில்அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாகனம் நிறுத்துவதில் தகராறு
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர், பெங்களூரு இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தூபனஹள்ளியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிராக தொழில்அதிபர் ராஜண்ணா வசிக்கிறார். தன்னுடைய வீட்டு முன்பாக தனக்கு சொந்தமான வாகனங்களை ராஜண்ணா நிறுத்தி வைப்பது வழக்கம்.
அதுபோல், கடந்த ஆண்டு(2022) செப்டம்பர் மாதம் 12-ந் தேதியும் அவர் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தார். வீட்டு முன்பு சாலையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால், மற்ற வாகனங்கள் செல்லவும், மக்கள் நடந்து செல்லவும் தொந்தரவு ஏற்படுவதாக கூறி ராஜண்ணாவிடம், நடிகை சஞ்சனா தெரிவித்தார்.
சஞ்சனாவுக்கு கொலை மிரட்டல்
இதுதொடர்பாக 2 பேருக்கும் வாக்குவாதம் உண்டாகி இருந்தது. அப்போது நடிகை சஞ்சனாவை கொலை செய்து விடுவதாக ராஜண்ணா மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து இந்திராநகர் போலீசில் சஞ்சனா புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்த ராஜண்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடிகை சஞ்சனா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு 6 மாதம் கழித்து ராஜண்ணா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க இந்திராநகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், ராஜண்ணா மீது இந்திராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.