கன்னட படத்திற்கு தடை கோரிய நடிகை ரம்யாவின் மனு தள்ளுபடி
|‘ஹாஸ்டல் ஹுடுகரு பேகாகித்தாரே’ என்ற கன்னட படத்திற்கு தடை கோரிய நடிகை ரம்யாவின் மனுவை பெங்களூரு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
நடிகை ரம்யா மனு
"ஹாஸ்டல் ஹுடுகரு பேகாகித்தாரே" (விடுதி பசங்க தேவை) என்ற கன்னட திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி, நடிகை ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அந்த படத்தில் நடிகை ரம்யா நடிக்காத காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதற்கு ரம்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பெங்களூரு வணிக கோர்ட்டில் நடிகை ரம்யா நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.
ரூ.1 கோடி நஷ்டஈடு
அந்த மனுவில், 'ஹாஸ்டல் ஹுடுகரு பேகாகித்தாரே' படத்தில் தான் நடிக்காத காட்சிகள் தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரினார்.
இதையடுத்து அந்த படம் வெளியிட கோர்ட்டு தற்காலிகமாக தடை விதித்தது. மேலும் தனது காட்சிகளுடன் படத்தை வெளியிடுவதாக இருந்தால் தனக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடுமாறு ரம்யா மனுவில் கேட்டு இருந்தார்.
ரம்யா மனு தள்ளுபடி
இந்த நிலையில் அந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. ஹாஸ்டல் ஹுடுகரு படத்தை திட்டமிட்டப்படி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட அனுமதி வழங்குமாறும், நடிகை ரம்யாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறும் படத் தயாரிப்பாளர்கள் கேட்டனர்.
இந்த கருத்தை ஏற்றுக்கொண்ட வணிக கோர்ட்டு நீதிபதி ரவீந்திர ஹெக்டே, நடிகை ரம்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த படம் திட்டமிட்டப்படி இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.