35 அடி உயர சுவரில் நடிகை ரம்யாவின் பிரமாண்ட உருவப்படத்தை வரைந்த ரசிகர்
|40-வது பிறந்தநாளையொட்டி 35 அடி உயர சுவரில் நடிகை ரம்யாவின் உருவப்படத்தை பிரமாண்டமாக ரசிகர் ஒருவர் தீட்டியுள்ளார். இது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
பெங்களூரு:
40-வது பிறந்தநாளையொட்டி 35 அடி உயர சுவரில் நடிகை ரம்யாவின் உருவப்படத்தை பிரமாண்டமாக ரசிகர் ஒருவர் தீட்டியுள்ளார். இது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
நடிகை ரம்யா
கன்னடம், தமிழ், தெலுங்கு திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார். இந்த நிலையில் திரைத்துறைக்கு ரம்யா மீண்டும் மறுபிரவேசம் செய்து உள்ளார்.
'உத்தர கன்னடா' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்யா தனது 40-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடினார். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தனக்கு 40 வயது ஆகிவிட்டதாகவும், 40 வயதை எட்டியோர் பட்டியலில் நானும் இடம்பெறுகிறேன்' என்றும் குறிப்பிட்டு இருந்தார். ரம்யாவுக்கு திரை உலகினர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
35 அடி உயர சுவரில் பிரமாண்ட படம்
இந்த நிலையில் ரம்யாவின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர் ஒருவர் சுவரில் 35 அடி உயரத்திற்கு ரம்யாவின் உருவத்தை வரைந்து அசத்தி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெங்களூரு எலகங்கா அருகே வசித்து வருபவர் பாதல் நஞ்சுண்டசாமி. ஓவியரான இவர் நடிகை ரம்யாவின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் ரம்யாவின் பிறந்தநாளையொட்டி தனது வீட்டின் அருகே உள்ள சுவரில் 35 அடி உயரத்திற்கு ரம்யாவின் உருவத்தை பாதல் வரைந்து உள்ளார்.
சீட்டுக்கட்டுகளில் ஆர்ட்டின் ராணி கார்டு இருப்பது போல் ரம்யாவின் படத்தை வரைந்து, அவரது தலையில் கிரீடம் சூட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படம் நடிகை ரம்யாவின் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த படத்திற்கு அவர்கள் லைக் செய்து வருகின்றனர்.
பித்துப்பிடிக்க வைக்கிறது
மேலும் பாதலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கன்னட நடிகை ஒருவரின் உருவத்தை சுவரில் 35 அடி உயரம், 15 அடி அகலத்தில் பிரமாண்டமாக வரைந்து இருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதல் வரைந்த தனது பிரமாண்ட உருவப்படத்தை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு உள்ள நடிகை ரம்யா, 'இது என்னை பித்துப்பிடிக்க வைக்கிறது. நன்றி பாதல்' என்று கூறியுள்ளார்.