கன்னட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு இரவு விருந்து அளித்த பிரதமர் மோடி
|பெங்களூரு ராஜ்பவனில் கன்னட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பிரபலங்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு ராஜ்பவனில் கன்னட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து பிரபலங்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இரவு விருந்து
14-வது சர்வதேச பெங்களூரு விமான கண்காட்சி தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அதனை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை பெங்களூரு வந்தார். அன்றைய தினம் இரவு அவர் ராஜ்பவனில் தங்கினார். அங்கு அவர் கன்னட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பிரபலங்களை வரவழைத்து அவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் அஸ்வினி புனித் ராஜ்குமார், நடிகர்கள் யஷ் (கே.ஜி.எப்.), ரிஷப் ஷெட்டி (காந்தாரா), நடிகை 'அய்யோ' சிரத்தா, கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்பிளே, வெங்கடேஷ் பிரசாத், ஜவகல் ஸ்ரீநாத், மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, தொழில் அதிபர் தருண் மேத்தா, நிகில் காமத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் கலந்துகொண்டவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரபலங்கள் நெகிழ்ச்சி
நடிகர்களிடம் கன்னடம், கலாசாரம், சினிமா, நாடகம், திரைத்துறை குறித்தும், கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட்டுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பது குறித்தும், தொழில் அதிபர்களுடன் தொழில் வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனைகளை கேட்டார்.
இந்த சந்திப்பு தொடர்பாக பிரபலங்கள் நெகிழ்ச்சி கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து அனில் கும்பிளே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராஜ்பவனில் சக கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் மோடியை சந்தித்தது எனக்கு கிடைத்த மரியாதை ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெங்கடேஷ் பிரசாத் தனது டுவிட்டரில், "ராஜ்பவனில் பிரதமர் மோடியை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியான தருணம். இந்தியாவில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், ஒலிம்பிக், விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவது குறித்து பயனுள்ள வகையில் விவாதித்தார்" என்றார்.
கண் சிமிட்டவில்லை
நகைச்சுவை நடிகை 'அய்யோ' சிரத்தா தனது டுவிட்டரில், "நமஸ்கார், ஆம். நான் நமது நாட்டின் பிரதமர் மோடிைய சந்தித்தேன். அவர் என்னை பார்த்ததும் முதல் வார்த்தையாக அய்யோ என்று கூறினார். அவ்வாறு அவர் கூறியபோது நான் கண் சிமிட்டவில்லை. உண்மையிலேயே இதை அவர் கூறினாரா? என்று நினைத்து பாா்த்தேன். இது அங்கு நடந்தது. இந்திய பிரதமரே நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில் அதிபர் தருண் மேத்தா டுவிட்டரில், "பிரதமருடனான சந்திப்பு அற்புதமானது. பேட்டரி தயாரிப்பு குறித்து அவர் ஆழமான விஷயங்களை கேட்டார். தற்போது மேற்கொள்ளப்படும் எரிசக்தி வினியோக சங்கிலி, மின்சார வாகனங்கள் பயன்பாடு குறித்து பேசினார்" என்று தெரிவித்துள்ளார்.
மரக்கன்று நட்ட பிரதமர்
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்னட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை அழைத்து பிரதமர் மோடி விருந்தளித்து கவுரவித்து கலந்துரையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று காலை பிரதமர் மோடி ராஜ்பவனில் சந்தன மரக்கன்றை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினார்.