நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு
|நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
பிரபல கன்னட திரைப்பட நடிகர் உபேந்திரா 'யு.ஐ.' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்படிப்பு பெங்களூரு நெலமங்களா பகுதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடக்கிறது. அதில் உபேந்திரா பங்கேற்று நடித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். காலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. அத்துடன் லேசான மழையும் பெய்தது. இதனால் அதிக குளிர் காற்றும் வீசியது. இதனால் உபேந்திராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரது உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்தது. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு அவர் அங்கிருந்து நேராக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அப்போது அவர் தனது முகநூல் பக்கத்தில் நேலையில் வந்து பேசும்போது, "நான் தற்போது படப்பிடிப்பு தளத்தில் உள்ளேன். உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதனால் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. நான் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன்" என்றார்.