ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக நடிகர் சுதீப்புக்கு மிரட்டல் கடிதம்
|ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி நடிகர் சுதீப்புக்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர். மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பெங்களூரு:
ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி நடிகர் சுதீப்புக்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர். மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நடிகர் சுதீப்புக்கு மிரட்டல்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சுதீப். இவர், தமிழில் வெளியான 'நான் ஈ', 'புலி' படங்களில் வில்லனாக நடித்து பிரபலமாகி இருந்தார். கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகர் சுதீப் பா.ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள நடிகர் சுதீப் வீட்டுக்கு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
அந்த கடிதங்களில் நடிகர் சுதீப் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்தார்கள். சுதீப்பை தகாத வார்த்தையிலும் மர்மநபர்கள் திட்டி இருந்தார்கள். இதனால நடிகர் சுதீப், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆபாச வீடியோக்களை வெளியிடுவோம்
அந்த கடிதங்களில், நீ எத்தனை பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி இருக்கிறாய். இதற்கு முடிவு கட்டும் விதமாக ஆபாச வீடியோக்கள் வெளியிடப்படும். துபாய், ராஜராஜேசுவரிநகர், கடலோர மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், சென்னை, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நடந்த ஆபாச வீடியோக்கள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த கடிதங்களை எழுதி அனுப்பி வைத்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக சுதீப்புக்கு மிரட்டல் விடுத்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடிகர் சுதீப்பின் மேலாளர் ஜாக் மஞ்சா புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நடிகர் சுதீப்புக்கு மிரட்டல் விடுத்த மர்மநபர்களை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கடிதம் எங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து வருகின்றனர். நடிகர் சுதீப்புக்கு மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டுள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதுடன், மர்மநபர்களை உடனடியாக கைது செய்யும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
மிரட்டல் விடுத்தவர்கள் யார் என தெரியும் - நடிகர் சுதீப்
இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று நடிகர் சுதீப் நிருபர்களிடம் கூறுகையில், 'எனக்கு மிரட்டல் விடுத்து 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட கூடிய நபர் நான் இல்லை. எனக்கு யார் மிரட்டல் விடுத்தார்கள் என்பது தெரியும். அவர்களை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. இந்த விவகாரத்தை நான் சும்மா விட மாட்டேன். இதற்கு தக்க பதில் கொடுப்பேன். ஏனெனில் மற்றொருவருக்கு பாடமாக அமைய வேண்டும்' என்றார்.