கன்னட திரைப்பட இயக்குனர் மீது நடிகர் சுதீப் மானநஷ்ட வழக்கு
|பணம்பெற்று மோசடி செய்ததாக புகார் கூறிய விவகாரத்தில் கன்னட திரைப்பட இயக்குனர் மீது நடிகர் சுதீப் மானநஷ்ட வழக்கை தொடர்ந்தார்.
பெங்களூரு:-
நடிகர் சுதீப்
கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருப்பவர் சுதீப். இவர் தமிழில் விஜய் உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சுதீப் மீது கன்னட திரைப்பட இயக்குனர் எம்.என்.குமார் திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்தார். அதில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகர் சுதீப்பிற்கு ரூ.9 கோடி கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு படம் நடித்து கொடுக்கவில்லை.
மேலும் அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி இருந்தார். மேலும் இதற்கு பதில் அளிக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம்நடத்துவேன் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த நடிகர் சுதீப், தன்னைப் பற்றி பொய்யான தகவல் வெளியிட்டு, அவப்பெயரை ஏற்படுத்தியதற்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார். இல்லையென்றால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவதாக எச்சரித்து இருந்தார். இதுதொடர்பாக நோட்டீஸ் ஒன்றையும் அவருக்கு அனுப்பி வைத்தார்.
வழக்கு தொடரவில்லை
இந்த நிலையில் நோட்டீசை பெற்று கொண்டஇயக்குனர் குமார் இதுவரை மன்னிப்பு கேட்காமல் இருந்ததால் நடிகர் சுதீப் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்காக பெங்களூரு மாநகராட்சி அருகே உள்ள சிட்டி சிவில் கோர்ட்டிற்கு நடிகர் சுதீப் நேற்று நேரில் வந்தார். அவர் அறை எண் 13-ல் செயல்பட்டு வரும் கோர்ட்டில், இயக்குனர் குமார் மீது மானநஷ்ட புகார் கூறி மனு அளித்தார். அதனை ஏற்று, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நடிகர் சுதீப் தொடர்ந்துள்ள மானநஷ்ட வழக்கு குறித்து இயக்குனர் குமார் கூறுகையில், 'நான் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். எனக்கு எது சரி, தவறு என்பது தெரியும். நடிகர் சுதீப் மன்னிப்பு கேட்க கூறி அனுப்பிய நோட்டீசை பெற்றேன். அது ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. இதுகுறித்து எனது வக்கீலுடன் பேசி உள்ளேன். நான் நடிகர் சுதீப் குறித்து அவதூறாக பேசவில்லை. யாரிடமும் புகார் அளிக்கவில்லை. திரைப்பட வர்த்தகசபை மூலம் தீர்வு காண முடிவு செய்தேன்' என்றார்.