நடிகர் சுதீப்புக்கு வந்த மிரட்டல் கடிதங்கள், அனுப்பப்பட்ட இடம் கண்டுபிடிப்பு
|ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி நடிகர் சுதீப்புக்கு வந்த மிரட்டல் கடிதங்கள், எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பெங்களூரு:
ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக கூறி நடிகர் சுதீப்புக்கு வந்த மிரட்டல் கடிதங்கள், எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சுதீப்புக்கு மிரட்டல் கடிதங்கள்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சுதீப். இவரது ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாகவும், தகாத வார்த்தையில் திட்டியும் மர்மநபர்கள் கடிதங்கள் அனுப்பி இருந்தனர். கடந்த மாதம் ஒரு கடிதம் பெங்களூரு ஜே.பி.நகர், 6-வது ஸ்டேஜ், 17-வது கிராசில் உள்ள நடிகர் சுதீப் வீட்டுக்கு வந்திருந்தது. அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு, கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவும் அதுபோல், மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதுகுறித்து நடிகர் சுதீப் சார்பில் ஜாக் மஞ்சு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் டிரைவர் மீது சந்தேகம்
முதற்கட்டமாக ஓசூர் ரோடு பொம்மனஹள்ளியில் உள்ள தபால் பெட்டியில் அந்த மிரட்டல் கடிதத்தை மர்மநபர்கள் போட்டு, சுதீப் வீட்டுக்கு அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கையால் எழுதாமல் டைப் செய்திருந்திருந்தார்கள். இதையடுத்து, பொம்மனஹள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சுதீப்பின் முன்னாள் கார் டிரைவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்து. கார் டிரைவரை பயன்படுத்தி இந்த மிரட்டல் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், டிரைவருக்கு பின்னால் பெரிய நபர் இருப்பதாகவும் போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து, கார் டிரைவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.