நந்தினி பால் விளம்பர தூதராக நடிகர் சிவராஜ்குமார் நியமனம்
|கர்நாடக பால் கூட்டமைப்பின் நந்தினி பாலுக்கு விளம்பர தூதராக நடிகர் சிவராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு:-
நடிகர்புனித் ராஜ்குமார்
கர்நாடக பால் கூட்டமைப்பு நந்தினி என்ற பெயரில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. அது மட்டுமின்றி நெய்,தயிர் உள்ளிட்ட இனிப்பு வகைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கர்நாடகத்தில் நந்தினி பால் பொருட்கள் பிரபலமாக திகழ்கின்றன. இந்த நந்தினி பாலுக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் விளம்பர தூதராக இருந்தார். அவர் எந்த விதமான கட்டணமும்பெறாமல் இலவசமாக அந்த பால் பொருட்களை விளம்பரப்படுத்தினார். அவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு திடீரென மரணம் அடைந்துவிட்டார்.
கட்டணம் பெறாமல்...
இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பீமா நாயக் நடிகர் சிவராஜ்குமாரை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, நந்தினி பாலுக்கு விளம்பர தூதராக இருந்து அவற்றை விளம்பரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதை சிவராஜ்குமார் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தனது தந்தை, சகோதரரை போல் தானும் நந்தினி பாலுக்கு கட்டணம் பெறாமல் விளம்பர தூதராக இருப்பதாக அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது கர்நாடக பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் உடன் இருந்தார்.
அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பீமா நாயக், 'நந்தினி பாலுக்கு நடிகர் சிவராஜ்குமார் கட்டணம் பெறாமல் விளம்பர தூதராக செயல்பட ஒப்புக்கொண்டுள்ளார்' என்று கூறினார்.