ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!
|நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.
ராஞ்சி,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார்.
அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று ரஜினி வழிபட்டார். இவரின் இமயமலை பயணம் நேற்றுடன் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினி, ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.