< Back
தேசிய செய்திகள்
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
தேசிய செய்திகள்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

தினத்தந்தி
|
29 Oct 2022 12:15 AM IST

வருகிற 1-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

கன்னட மொழி உணர்வு

கர்நாடக ராஜ்யோத்சவாவை முன்னிட்டு கன்னட வளர்ச்சித்துறை சார்பில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் கன்னட மொழி உணர்வு குறித்த பாடல் பாடும் நிகழ்ச்சி நேற்று மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கன்னட மொழி உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களை பாடினர். பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் கன்னட தாய் வாழ்த்து பாடலை பாடினர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இன்று (நேற்று) கர்நாடகத்திற்கு ஒரு முக்கியமான நாள். ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கன்னட மொழி உணர்வு குறித்த 6 பாடல்களை பாடியுள்ளனர். இதன் மூலம் அனைத்து கன்னடர்களின் மனநிலையும் ஒன்றாக சேர்ந்துள்ளது. எல்லாவற்றையும் மறந்து கன்னட மொழிக்காக கன்னடர்கள் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்ற கருத்து இந்த பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

கர்நாடக ரத்னா விருது

இதை கன்னடர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த பாடல் பாடும் நிகழ்ச்சி உலக அளவில் சாதனை படைத்துள்ளது. கிராமங்களிலும் கன்னட பாடல்கள் பாடப்பட்டுள்ளன. நமது மாநிலம் இன்று கன்னட மயமாகியுள்ளது. இதன் மூலம் புவனேஸ்வரி அம்மனுக்கு கவுரவத்தை சமர்பித்துள்ளோம். கன்னட வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

புதிய கர்நாடகத்தால் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்றுள்ளோம். இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய கன்னடர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நடிகர் புனித் ராஜ்குமார் நம்மை விட்டு பிரிந்து சென்று ஓராண்டு ஆகிவிட்டது. கர்நாடகம் மற்றும் கன்னட மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் கவுரவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக ரத்னா விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

வருகிற 1-ந் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்கு கன்னடர்கள் அனைவரும் வர வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் இதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரா மற்றும் டாக்டர் ராஜ்குமார் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

புனித் ராஜ்குமார் உருவாக்கியுள்ள கந்ததகுடி படம் வெளியாகியுள்ளது. இது காடு மற்றும் நாட்டை ஒருங்கிணைக்கும் படம் ஆகும். இயற்கையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் கர்நாடகத்தின் காடு வளங்களை மக்களுக்கு தெரிவிக்கும் அற்புதமான முயற்சி ஆகும். இந்த படத்தை கன்னடர்கள் அனைவரும் பார்த்து கர்நாடகத்தின் இயற்கை வளங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

எடியூரப்பா

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சதானந்தகவுடா, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார், எம்.பி.க்கள் பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா, ஜக்கேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்