சித்தார்த் பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் போராட்டம்: நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டார்
|நடிகர் சித்தார்த் பட நிகழ்ச்சியில் புகுந்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் சார்பில் காவிரி நீர் தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் அண்மையில் நடித்துள்ள சித்தா என்ற திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இதுகுறித்து அறிந்த கன்னட அமைப்பினர் அங்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையை முற்றுகையிட்டு அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது காவிரி நீர் தங்களுக்கு சொந்தம் எனவும், தமிழ் திரைப்படங்கள் கர்நாடகத்தில் திரையிட கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தனர். அவர்கள் தொடர் வாக்குவாதத்தால், மேடையில் அமர்ந்து இருந்த நடிகர் சித்தார்த் அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது. இதற்கு கன்னட நடிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கன்னட நடிகர் பிரகாஷ் ராஜ் இதுகுறித்து பேசுகையில், காவிரி நம்முடையது தான். ஆனால் ஏழை எளியோர், நடிகர்களுக்கு தொல்லை கொடுப்பது சரியல்ல. இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சியினரை தான் கேள்வி கேட்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு கன்னடரான நான், கன்னடர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.