< Back
தேசிய செய்திகள்
சிவசேனாவில் இணைந்தார் இந்தி நடிகர் கோவிந்தா
தேசிய செய்திகள்

சிவசேனாவில் இணைந்தார் இந்தி நடிகர் கோவிந்தா

தினத்தந்தி
|
29 March 2024 6:01 AM IST

மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே முன்னிலையில் இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மும்பை,

இந்தி நடிகர் கோவிந்தா நாடாளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் மும்பையில் உள்ள வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் அவர் நேற்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார். ஏக்நாத் ஷிண்டே, காவி கொடியை கொடுத்து 60 வயதான நடிகர் கோவிந்தாவை கட்சிக்கு வரவேற்றார்.

பின்னர் நடிகர் கோவிந்தா பேசுகையில், ''2004 முதல் 2009 வரை அரசியலில் ஈடுபட்ட பிறகு, நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. 14 ஆண்டுகால வனவாசத்துக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். வாய்ப்பு கொடுத்தால் நான் கலாசாரம், கலை துறையில் பணியாற்றுவேன். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆன பிறகு மும்பை அழகாக மாறி வருவதும், வளர்ச்சி அடைவதும் தெரிகிறது'' என்றார்.

நடிகர் கோவிந்தா 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வடக்கு மும்பை தொகுதியில் தொடர்ந்து 5 முறை எம்.பி.யாக இருந்த பா.ஜனதாவின் ராம் நாயக்கை தோற்கடித்து அதிர்ச்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் சிவசேனா சார்பில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி சார்பில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அமோல் கிருத்திகர் போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்