நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை
|ரேணுகாசாமி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பின்னர் அவர், ஜூன் 22-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதால், பெங்களூருவில் இருந்து பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு பெறுகிறது. நடிகர் தர்ஷன் நடித்த படங்கள் தான் 50 நாட்கள், 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்படும். தற்போது அவர் சிறைவாசம் அனுபவிக்கும் நாட்களும் எண்ணப்பட்டு வந்த நிலையில், 100 நாட்களை சிறையில் தர்ஷன் கழித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் தர்ஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அவரது சார்பில் மூத்த வக்கீல் பி.வி.நாகேஸ் ஆஜராகி வாதாட உள்ளார். இன்று தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது விசாரணை தொடர்ந்து நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.