நடிகர் தர்ஷனை பெல்லாரி சிறைக்கு மாற்ற உத்தரவு
|தர்ஷன் உடன் புகைப்படத்தில் இருந்த மற்ற கைதிகளையும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
பிரகல கன்னட நடிகர் தர்ஷன் (வயது 47) தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள், குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை தனது கூட்டாளிகள் மூலம் கொலை செய்தார். இந்த வழக்கில் நடிகர் தா்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சிறை அதிகாரிகள் 9 பேரை பணியிடை நீக்கம் செய்து கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாக புகைப்படங்கள் வெளியான நிலையில் நடிகர் தர்ஷனை பெல்லாரி சிறைக்கு மாற்ற பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தர்ஷன் உடன் புகைப்படத்தில் இருந்த மற்ற கைதிகளையும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.